சீன வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்!
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடிபெற்று வருகிறது. சீனாவில் உள்ள தியான்ஜினில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை உச்சி மாநாட்டை சீனா நடத்தவுள்ளது. மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வரும் திங்கள்கிழமை இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது அவர், இந்திய சீனா எல்லைப் பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் ஏற்ப்பட்ட இந்திய சீனா எல்லை மோதல்களில் இரு நாட்டு உறவில் விரிசல் அடைந்தன. இந்த நிலையில் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் சுற்றுலா விசாக்களை மீண்டும் தொடங்கியுள்ளன. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகளை விதித்த நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.