For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அருணாச்சலப் பிரதேச எல்லையோரம் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டம்!

11:14 AM Apr 11, 2024 IST | Web Editor
அருணாச்சலப் பிரதேச எல்லையோரம் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டம்
Advertisement

அருணாச்சல பிரதசே மாநில எல்லையோரம் மேலும் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, அம்மாநிலத்துக்கு ஜங்னான் என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறது. ஆனால், அருணாச்சலப்பிரதேச மாநிலம் இந்தியாவினுடைய பகுதி என இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது.

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்னை நிலவி வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுவதும், எல்லையோரங்களில் புதிய கிராமங்களை அமைப்பதும் என சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதசே மாநில எல்லையோரம் மேலும் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சல பிரதசேத்திற்கு உட்பட்ட இந்திய-சீன உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LAC) அருகே மேலும் 175 எல்லையோர கிராமங்களை உருவாக்கி தனது ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சீனாவின் சியோகாங் (வளமான கிராமங்கள்) திட்டத்தின் கீழ் ஏற்கனவே 628 கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 175 எல்லையோர கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லையோர கிராமங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், திபெத் மற்றும் எல்.ஏ.சி.க்கு அருகில் உள்ள பகுதிகளில் விரிவான ராணுவ உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களையும் சீனா செயல்படுத்தி வருகிறது. இந்த கிராமங்கள் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்களை வலுப்படுத்தவும், எல்.ஏ.சி. அருகே தனது ராணுவத் தயார்நிலையை அதிகரிக்கவும் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

லடாக் - இமாச்சலப் பிரதேசம் எல்லையோரம் உள்ள தனது 'G-219' தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிக்கிம் - அருணாச்சல் பிரதேசம் எல்லையோரம் உள்ள தனது 'G-318' தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்கிற உரிமையை தீவிரமாக வெளிப்படுத்தவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அதிகரித்து பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட உத்தியாக சீனாவின் இந்த திட்டங்கள் கருதப்படுகிறது.

Tags :
Advertisement