5,000 கி.மீ தொலைவில் நோயாளி… அறுவை சிகிச்சை மூலம் #lungTumor அகற்றி மருத்துவர் சாதனை - எங்கு தெரியுமா?
சீனாவில் 5000 கி.மீக்கு தொலைவில் இருந்த மருத்துவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் தொழில்நுட்பமும் தற்போது அனைவரின் அடிப்படை தேவையாகிவிட்டது. பிறப்பில் இருந்து இறப்பு வரை அறிவியலும், தொழில்நுட்பமும் நம் நிழல் போல கூடவே வருகிறது. தொழில்நுட்பம் பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி பல சாதகங்களையும், பாதகங்களையும் கொண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் பல ஆச்சரியமூட்டும் வேலைகளும் செய்து வருகிறது.
சீனாவின் மேற்கு பகுதியில் ஒரு நபர் நுரையீரல் சிகிச்சைக்காக சின்ஜியாங் பகுதியின் கஷ்கரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் லுவோ கிங்குவான், ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். அந்த நோயாளி இருக்குமிடத்திலிருந்து சுமார் 5,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். ஷாங்காயில் இருந்த அந்த மருத்துவர், 5G தொழில்நுட்பம் உள்ள அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ மூலம் அந்த நோயாளியின் நுரையீரல் கட்டியை அகற்றியுள்ளார்.
இதையும் படியுங்கள் : “கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்” – #chennai பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் கூட்டுக் குழு அறிவிப்பு!
இந்த அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் குர்கானில் இருந்த மருத்துவர், டெல்லியில் இருந்த நோயாளிக்கு, சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்த ரோபோ, சுமார் 5 கைகளை கொண்டிருக்கும். இந்த ரோபோ மூலம் இதய அறுவை சிகிச்சை கூட செய்யலாம் என கூறப்படுகிறது.
அந்த ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் முன்னால் ஒரு 3D தொழில்நுட்பம் கொண்ட 32 இன்ச் ஸ்கீரின் இருக்கும். ஒரு கேமராவோடு இருக்கும் அந்த கருவி, மருத்துவர் வேறு எங்கும் பார்த்தால் நோயாளிக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்திவிடும். மறுபக்கம் நோயாளியுடன் இருக்கும் ரோபோ 5 கைகளுடன் 8 மில்லி மீட்டர் கருவியுடன் சிகிச்சை அளிக்கும் என கூறப்படுகிறது.