“ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்களுக்கு வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். வங்கி ஊழியரான இவர், கொடிக்குளம் அரசுப் பள்ளி விரிவாக்கத்துக்காக தனக்குச் சொந்தமான ரூ.4.50 கோடி மதிப்பிலான 1.50 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இதுகுறித்து அறிந்த மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், பூரணம் அம்மாளை கடந்த ஜன. 11-ம் தேதி நேரில் சந்தித்து பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியும் பூரணம் அம்மாளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.
கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்… pic.twitter.com/NGiHY3iJYG
— M.K.Stalin (@mkstalin) January 14, 2024
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என தனது ட்விட்டர் (எக்ஸ்) பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,
”கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.
ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.