தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெறவுள்ள அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன்மூலம், சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் கொந்தகையில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் வைகை நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு பணி துவங்கியது. இந்த ஆய்வில் தாயக்கட்டை, வரிவடிவ எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், செங்கல் கட்டுமானம் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்தன. அதன் பின் தமிழக தொல்லியல் துறை 6 கட்ட (மொத்தம் 9 கட்ட அகழாய்வு) அகழாய்வுகளை நடத்தி முடித்தது.
9ம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் வரை வீரணன் என்பவரது 35 சென்ட் நிலத்தில் நடைபெற்றது. இதில் 14 குழிகள் தோண்டப்பட்டு, 453 கண்ணாடி மணிகள், 168 வட்டச்சில்லுகள், நான்கு காதணிகள், 15 செஸ் காயின் உள்ளிட்ட 804 பொருட்கள் கண்டறியப்பட்டன.
தொடர்ந்து, 10ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று (ஜூன் 18) தொடங்கி செப்டம்பர் மாத இறுதி வரை நடைபெற உள்ளது. கீழடியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 12 குழிகள் அமைத்து மற்றும் கொந்தகையில் 7 குழிகள் அமைத்து 10ம் கட்ட அகழாய்வு நடைபெற உள்ளன.