Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“டெல்லியில் விவசாயிகள் இறந்தனர்... ஆனால் தமிழ்நாட்டில்” - அ.வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மூன்றே மாதத்தில் வெற்றி கண்டுள்ளார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்
08:52 PM Jan 26, 2025 IST | Web Editor
Advertisement

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு ஒரு காரணமாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, அவரை பாராட்டும் விழா மதுரை அரிட்டாப்பட்டி மற்றும் அ.வல்லாளப்பட்டி பகுதியில் மதுரை கிராம மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

அதன்படி மக்களின் அழைப்பை ஏற்று இன்று மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் அரிட்டாபட்டி பகுதி மக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து அங்கிருந்து அ.வல்லாளப்பட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களையும் சந்தித்து பேசினார். அ.வல்லாளப்பட்டி மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

“இந்த விழா எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த விழா டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்திற்கு நமக்கு கிடைத்து இருக்கக்கூடிய வெற்றி. அந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய 30க்கும் மேற்பட்ட பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நேற்று அமைச்சர் மூர்த்தி தலைமையில் என்னை வந்து சந்தித்தனர்.

அந்த சந்தித்திப்பின்போது உங்களுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறோம். நீங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, அழுத்தம் கொடுத்த காரணத்தால்தான் இந்த வெற்றி நமக்கு கிடைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு பாராட்டு விழா நடத்த போகிறோம் என்றார்கள். அதற்கு நான் எனக்கு எதற்கு பாராட்டு விழா அது என்னுடைய கடமை என்றேன். இங்கு நடைபெறும் பாராட்டு விழா உங்களுக்கான பாராட்டு விழாவாகத்தான் பார்க்கிறேன்.

இது நமக்கு கிடைத்திருக்கும் வெற்றி. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டார்கள். அதை நாம் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். இன்றைக்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலத்தில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் பெரிய பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் நூற்றுக்கணக்கான விவசாய பெருமக்கள் இறந்து போயிருக்கிறார்கள். அந்த போராட்டம் இரண்டு ஆண்டுகளாக நடந்தது. ஆனால், இங்கு டங்ஸ்டன் சுரங்க திட்டம் செய்தி வெளியான உடனே, நீங்களே போராட்டம் நடத்தி மூன்றே மாதத்தில் வெற்றி கண்டுள்ளீர்கள் என்பதுதான் முக்கியம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக என்ன செய்தது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்தார்களா? அதிமுகவில் உறுப்பினராக இருக்கக்கூடிய தம்பிதுரை, இந்த சட்டத்தை ஆதரித்து வரவேற்று பேசியிருந்ததை பார்த்திருப்பீர்கள். அதுதான் இந்த திட்டத்திற்கு தொடக்க புள்ளியாக இருந்தது. தொடர்ந்து இரண்டு முறை தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறோம்.

பாஜக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் விடும் முயற்சியை செய்தது. அதனால் தொடர்ந்து நாம் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. குறிப்பாக அரிட்டாப்பட்டியில் நடந்த கிராமத்து கூட்டத்தில் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்திற்கு எதிராக தீர்மானம் போட்டார்கள்.

மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மூர்த்தி நிச்சயமா நான் அனுமதி தரமாட்டேன் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். முதல்வராக நான் இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று உறுதியளித்தேன். பதவியைப் பற்றி எனக்கு கவலையில்லை. மக்களைப் பற்றிதான் கவலை. சட்டமன்றத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தையும் மக்களின் உணர்வுகளை மதித்து, பாஜக அரசு இந்த சுரங்க ஏல திட்டத்தை ரத்து செய்துள்ளார்கள்.

இத்திட்டத்திற்கு எதிராக தீர்மான நிறைவேற்ற ஆதரவாக அனைத்து கட்சியினரும் தங்களது உணர்வை வெளிப்படுத்தினார்கள். அவர்களை பிரித்து பார்க்க விரும்பவில்லை. உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். இது உங்களுக்கான ஆட்சி”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags :
ArittapattiDMKMaduraiMK StalintungstenTungsten Mining
Advertisement
Next Article