முதலமைச்சர் #MKStalin இன்று கோவை பயணம்!
அரசின் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார். இந்த கள ஆய்வுப்பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (நவ.5) கோவையில் இருந்து தொடங்குகிறார். கோவையில் இன்றும் (நவ.5), நாளையும் (நவ.6) நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் விமானம் மூலம் கோவை வருகிறார். திமுக-வினர் கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனையடுத்து, காலை 11.30 மணியளவில் விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கரில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பின்னர் மதியம் 12 மணியளவில் சுகுணா திருமண மண்டபத்தில், முதலமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நில எடுப்பில் இருந்து நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆணைகளை அந்த நில உரிமையாளர்களுக்கு வழங்குகிறார். இதனையடுத்து, மாலை 4 மணியளவில் போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.