'தடம்' பெட்டகத்தை #PMModi -க்கு பரிசாக அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
'தடம்' பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசாக அளித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு காவல் படையினர் மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார். பிரதமர் மோடியை சந்தித்த போது மூன்று முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள் : #MadrasHighCourt தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு!
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக 'தடம்' பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசாக அளித்து உள்ளார். திருநெல்வேலியில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடையை பரிசளித்தார். மேலும், புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட், விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை), கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு, நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால் மற்றும் பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம் ஆகியவற்றை பரிசளித்தார்.