பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!
பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியார் குறித்த கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.க்கள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவது இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.