Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும்" - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

01:54 PM Mar 20, 2024 IST | Web Editor
Advertisement

"எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்"  என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது.  மேலும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  இதனைத் தொடர்ந்து காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

” நம்முடைய கூட்டணிக்கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள்.  அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம்.  சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம்.  பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது.  தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியுடைய  நலன் முக்கியம்.  தமிழ்நாட்டின் நலன் முக்கியம்;  நாட்டின் எதிர்காலம்தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.

மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும்,  மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும்.  ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு.

தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய – நகரம் - பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன்.  எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்போதே சொல்லி விடுறேன்.  இதை ரொம்ப கண்டிப்புடனும் சொல்கிறேன்.

எல்லா தொகுதியிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.  தோழமைக் கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும்.  போஸ்டர்கள்,  துண்டறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களுக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும்.

வேட்பாளர் யாராக இருந்தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.  வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதுதான் ரொம்ப முக்கியம்! மக்களை நேரடியா சந்திக்க வேண்டும்.  இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தான்,  தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும்.

இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களை தமிழ்நாட்டில் விதைக்கலாம் என்ற எண்ணமே,  இனிமேல் பா.ஜ.க.வுக்கு கனவிலேயும் வரக்கூடாது.  அப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும். புதுவை உட்பட 40 தொகுதிகள்லயும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி ஜூன் 4-ஆம் தேதி வெற்றிச் செய்தியுடன் வந்து என்னைச் சந்தியுங்கள்!”

இவ்வாறு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
AIADMKCMOTamilNaduDistrict SecretriesDMKElection2024MKStalin
Advertisement
Next Article