#ChennaiRain | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு!
சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரை அகற்ற நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக இன்றும் ஆய்வு செய்தார்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்ன உள்ளிட்ட மாநிலத்தில் நான்கு வட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் 12 மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி திரும்பி உள்ளதால், நேற்று இரவு முதல் சென்னையில் மழை குறைந்ததது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கபாதை உள்பட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் மோட்டார் பம்பு செட் மூலம் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதனால், இன்று காலை வழக்கமான போக்குவரத்து தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதியில் நடந்து வரும் நீரை அகற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.