#Guidance_TN அலுவலகத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 50 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கிட இலக்கு நிர்ணயம்!
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவன இளம் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மற்றும் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கியதன் மைல்கல் நிகழ்வாக, தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவன (Guidance TamilNadu) அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். பின்னர் அங்குள்ள பணியாளர்களுடன் கலந்துரையாடி, ஊக்குவித்ததோடு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் (X) தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவன இளம் பணியாளர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (X) தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவன (Guidance TamilNadu) பணியாளர்களைச் சந்தித்தேன். இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 விழுக்காடு பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். மேலும், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் எனவும் அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.