முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இத்னை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தே அவர் தன் பணிகளைக் கவனித்து வந்தார். இந்த நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”முதல்வருக்கு இன்று காலை ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு அடைப்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது குறித்து மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து 4-வது நாளாக மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைப் பெற்று வருகிறார்.