ஜன.27 விழுப்புரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! காரணம் என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன.27, 28 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மற்றும் கோவையில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனைத்தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட மாவட்டங்களில் பல நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து விழுப்புரத்தில் கடந்த நவ.8, 29 ஆகிய தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஃபெஞ்சல் புயல் காரணமாக அந்த கள ஆய்வு பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜன.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன.27ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெறவுள்ள கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி காலை விழுப்புரத்தில் அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம், சமூக நீதி போராளிகள் நினைவு மண்டபம், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கத்தினையும் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.