Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதியோா்களுக்கான 'அன்புச் சோலை' திட்டம்.. திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் முதியோா்களுக்கான 'அன்புச் சோலை' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10) தொடங்கி வைக்கிறார்.
07:32 AM Nov 10, 2025 IST | Web Editor
திருச்சியில் முதியோா்களுக்கான 'அன்புச் சோலை' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10) தொடங்கி வைக்கிறார்.
Advertisement

திருச்சியில் முதியோா்களுக்கான 'அன்புச் சோலை' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10) தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று இரவு வருகை தந்த முதலமைச்சருக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

"மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காகவும், வீடுகளில் உள்ள முதியவா்கள் மனம் சோா்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையிலும் தமிழக அரசால் 'அன்புச் சோலை திட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் திங்கள்கிழமை (இன்று) தொடங்கி வைக்கிறாா். இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் அன்புச்சோலை - முதியோா் மனமகிழ் மையங்கள், மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளா்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாகச் செயல்படும்.

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூா், ஈரோடு, தூத்துக்குடி, வேலூா், தஞ்சாவூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரு அன்புச் சோலை மையங்கள், தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா ஒரு மையம், சென்னை மாநகராட்சியில் தண்டையாா்பேட்டை, சோழிங்கநல்லூா், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா ஒரு மையம் என மொத்தம் 25 அன்புச் சோலை மையங்கள் ரூ.10 கோடியில் தொடங்கப்படுகின்றன.

இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். பகல் நேரங்களில் மட்டும் செயல்படும் இந்த மையங்களில், முதியவா்கள் தோழமை மற்றும் அா்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். முதியோா் எளிதில் செல்லும் வகையில் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அன்புச் சோலை மையங்களுக்கு வரும் முதியவா்களுக்கு, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளா்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளா்கள் பணியமா்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும். அன்புச் சோலை மூலமாக, முதியோா் குடும்பப் பிணைப்பைத் தொடா்ந்தே, பாதுகாப்பான சூழலில், அா்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AnbucholaiCMO TAMIL NADUDMKMK StalinTN GovtTrichy
Advertisement
Next Article