மூன்று விவசாயிகளுக்கு 'நம்மாழ்வார்' விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இயற்கை (அங்கக) வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதை ஊக்குவித்து பிற இயற்கை விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் "நம்மாழ்வார்" என்ற பெயரில் விருது வழங்கப்படும் என்று 2023-24-ம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 2024-25 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த சம்பத்குமார், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். அப்போது மூன்று விவசாயிகளுக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினையும் காசோலையையும் வழங்கி கௌரவித்தார். இதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.