அம்பேத்கர் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
அண்ணல் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கிய அவர் படிப்பது, எழுதுவது, போராடுவது என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
கிராமங்களில் அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துக்கூறி இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகள் வைத்தும் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில், ஏப்.14ம் தேதியான இன்று அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அம்பேத்கரின் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.