பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் பசும்பொன் செல்வதற்காக மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பசும்பொன் நோக்கி புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சரின் வருகையொட்டி மதுரை தெப்பக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தெப்பக்குளம் பகுதியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.