தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!
தமிழ்நாடு சட்டசபையில் 2025-2-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீது 3வது நாள் விவாதம் நடைபெற்றது. அப்போது முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு நாய் கடி சம்பவம் தொடர்பாகவும், நாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினர்.
இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ர் ஐ.பெரியசாமி, "சமீப நாட்களாக தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடுகள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. தெரு நாய்கள் கடித்து மரணம் அடையும் கால் நடைகளுக்கு பேரிடர் மேலாண்மை விதிகளின் படி உரிய இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தெரு நாய் கடித்து உயிரிழக்கும் மாடுகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.4,000, கோழிக்கு ரூ.100 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த 1,149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "தெருநாய்கள் பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினமே உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. வெறிநாய்களை பிடித்து ஊசி போட்டு குணமடைந்த பின் மீண்டும் விட்டுவிட வேண்டும் என சட்டம் சொல்கிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றால் தான் தீர்வு கிடைக்கும். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.