குடியரசுத் துணைத் தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று (அக்.28) தமிழகம் வந்தடைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, அவர் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், அங்கிருந்து மதுரை வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக மதுரை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவருடன் திமுக எம்.பி. கனிமொழி உடனிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.