ஜூன் 1-ல் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1 ஆம் தேதி டெல்லி செல்கிறார்.
இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
மக்களவை தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், இந்திய கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கூட்டணியில் உள்ள 28 கட்சிகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஜூன் 1-ஆம் தேதியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நிறைவடைய உள்ள நிலையில், அவரும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 1 ஆம் தேதி காலை 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.