Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ‘மாஸ்டர் கிளாஸ்’ தான்!” - மத்திய நிதி ஆணையக் குழுவின் கருத்தை பகிர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

08:09 PM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசின் 16வது நிதி ஆணையக் குழு அரவிந்த் பனகாரியாவின் கருத்தை பகிர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு ’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் மாஸ்டர் கிளாஸ் தான்!’ என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

மத்திய அரசின் 16வது நிதி ஆணையக் குழு அரவிந்த் பனகாரியா தலைமையில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று (நவ. 18) தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் சென்னையில் நிதி ஆணையக் குழு ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி பங்கீடு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனிடையே அரவிந்த் பனகாரியா மற்றும் உறுப்பினர்கள் செய்தியாளரைச் சந்தித்தனர். அப்போது அரவிந்த் பனகாரியா, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினோம். பொதுவாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக் குழு அமைக்கப்படும். மாநில அரசுகள் உடனான நிதி பங்கீடு குறித்த பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இந்த நிதிக் குழு ஆணையம் வழங்கும். அதன்படி இந்த 16வது நிதிக்குழு பல மாநிலங்களுக்குச் சென்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் எங்கள் பணிகளைத் தொடங்கினோம்.

மக்களவைத் தேர்தல் முடிந்ததில் இருந்தே ஒவ்வொரு மாநிலத்திலும் நிதிக் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இப்போது ஒவ்வொரு மாநிலமாகச் சென்று வருகிறோம். இன்னும் 16 மாநிலங்கள் உள்ளன. அடுத்த 7 மாதங்களில் மீதமுள்ள மாநிலங்களுக்கும் சென்றுவிடுவோம். தற்போதைய சூழலில் மாநிலங்களுக்கு வரி பகிர்வு 41% இருக்கிறது. அதை 50% ஆக உயர்த்த வேண்டும் எனப் பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அது தொடர்பாகப் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு நிதி பங்கீடு தொடர்பாகத் சமர்ப்பித்த அறிக்கை சிறப்பாக இருந்தது. அதை ஒரு மாஸ்டர் கிளாஸ் என்றே சொல்லலாம். வருமான இடைவெளியானது நுகர்வோர் திறனைக் கருத்தில் கொண்டு சரிசெய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 1971-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீடு அடிப்படையில் இது இருக்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரை அளித்து இருக்கிறது. வளர்ச்சியை எதிர்நோக்கும் மாநிலங்களுக்கும், வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கும் இடையேயான நிதி பகிர்வு இடைவெளி அதிகரித்துள்ளது.

முன்பு வளர்ச்சியை எதிர்நோக்கும் மாநிலத்திற்கு 3 பங்கு என்றால் வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு ஒரு பங்கு என்று 3:1 என்ற விகிதத்தில் நிதி பகிர்வு இருந்தது. ஆனால், இப்போது அது 6:1 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2011 மக்கள்தொகை அடிப்படையில் நிதி பகிர்வு செய்யப்படும் என்ற 15வது நிதிக்குழுவின் கணக்கீடு முறையைத் தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் தமிழ்நாட்டின் பங்கு 8% ஆக இருக்கிறது. அதே அளவிலான நிதி பகிர்வை எதிர்பார்ப்பதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு 5%ஆக உள்ள நிலையில், அதை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ளது. குறிப்பாகத் தனி நபரின் ஆண்டு வருமானத்தைப் பெயரளவில் புரிந்து கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.. பீகாரில் உருளைக் கிழங்கு விலையும் தமிழ்நாட்டில் அதன் விலையும் ஒன்று இல்லை என்பதால் வாங்கும் திறனில் உள்ள இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ளது. இதுவரை 10 மாநிலங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறோம். அதில் தமிழ்நாடு மட்டுமே தனி நபர் ஆண்டு வருமானம் மற்றும் வாங்கும் திறனைக் குறிப்பிட்டு பரிந்துரைகளைக் கோரியிருக்கிறது.

மற்ற மாநிலங்களில் இருந்தும் இதுபோன்ற கோரிக்கை வருகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எல்லா மாநிலங்களின் கோரிக்கையைக் கேட்ட பிறகே நிதி பகிர்வு உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர் பாதிப்புகள், அதை மறுகட்டமைப்பு செய்ய ஆகும் செலவுகள் குறித்தெல்லாம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கையைக் கருத்தில் கொண்டுள்ளோம். பேரிடருக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் மாநிலங்களுக்கு வளர்ச்சிக்கான நிதி தொடர்பான மாற்று வழிகள் குறித்து ஆராயப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அரவிந்த் பனகாரியா பேசிய இந்த உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்து, “தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு. - திருக்குறள் 383.

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும். - முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விளக்கம்.

தேவை அறிந்து, மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி குடிமக்களின் நலன் காக்கும் அரசாகவும், தனது அறிவுக் கூர்மையாலும், துணிவாலும் தக்க நேரத்தில் நமது உரிமையைக் கேட்டுப் பெறும் துணிவு கொண்டவராகவும் விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் “மாஸ்டர் கிளாஸ்” தான்!”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
Arvind PanagariyaCMO TamilNaduDMKEconomic ContributionFinance CommissionMK StalinNews7TamilThangam ThenarasuTN Govt
Advertisement
Next Article