காரைக்குடியில் 'வளர்தமிழ் நூலகத்தை' திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்படி 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து சிவகங்கை சென்ற முதலமைச்சருக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல் காரைக்குடி மாநகரம் சார்பில் கல்லூரி சாலை ராஜீவ்காந்தி சிலை அருகே திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் காரைக்குடியில் நூலகம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 12 கோடி செலவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் 'வளர் தமிழ் நூலகம்' ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். பின்னர், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் உருவச் சிலையையும் திறந்துவைத்தார்.