அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்ட 326 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (11.04.2025) பல்வேறு முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான அடையாளமாக திருச்சி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோவை மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள், இணை ஆணையர்கள் / செயல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர் / செயல் அலுவலர் ஆகியோரிடம் தங்க முதலீட்டிற்கான பத்திரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் 84 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொலி வாயிலாக திறந்து வைத்தார்.