4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று(டிச.3) அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை(டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதன்படி, காலை 8 மணிக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு முன்னேறி வருகிறது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்தாலும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
”மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் வாழ்த்துகள். இந்த ஆட்சிக் காலத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி, செழிப்பு ஏற்பட வாழ்த்துகள்".
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.