முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2025 - 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் நாளை (மார்ச் 14) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “வாழத்தகாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!
இது தொடர்பாக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 14-03-2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்” நடைபெறும்.
அதுபோது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.