’முதல்வர் - கூட்டணி தலைவர்கள் சந்திப்பு’ : ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக கடந்த 27.07.2025ம் தேதி பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் சகோதரரான சுர்ஜித் அரிவாளால் கவினை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் இதுவரை சுர்ஜித் மற்றும் அவரது தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவம் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி தமிழக அரசு மாற்றி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி கொலை தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது. மேலும் சிபிசிஐடி காவல்துறை சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ண குமாரிக்கு வரும் 15ம் தேதிக்குள் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன்அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணிகட்சித்தலைவர்களான வி.சி.க. தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர்கள்,சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஏவ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.