முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள் குறித்து பார்க்கலாம்.
பிரதமர் மோடி
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்”
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்"
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி
“எனது சகோதரரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்”
ஆளுநர் ஆ.என்.ரவி
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்”
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
"தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி வழியில், கட்சியை வழிநடத்தும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
`இளைஞர் அணிதான் என் தாய்வீடு’ என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத்தலைவர் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம். மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!"
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்"
தவெக தலைவர் விஜய்
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்"
பாமக நிறுவனர் ராமதாஸ்
"தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்"
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
"தனது 72-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்"
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி
"தென்னகத்தின் உரிமைக்குரலாய் - தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய் - தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் - தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம்"
சிபி சத்யராஜ்
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்"