சிதம்பரம் நடராஜர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தேர் திருவிழா - சிவசிவ கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்!
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த ஜன.4-ம் தேதி ஆருத்ரா தரிசனம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு இன்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை மதியம் சுமார் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. ஜன.15-ல் ஞானபிரகாசர் குளத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குள உற்சவம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகன் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதனையடுத்து, சிதம்பரத்தை சுற்றியுள்ள கீழ வீதி வழியாக தெற்கு வீதி,மேல் வீதி, மற்றும் வடக்கு வீதி வழியாக இன்று மாலை 5 மணியளவில் வந்தடையும்.
இதில், பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் சிவசிவ என கோஷங்களோடு தேரை பிடித்து இழுத்து வருகின்றனர். மேலும், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்படுகிறது.