#ChessOlympiad | 9வது சுற்றை டிரா செய்த இந்தியா!
செஸ் ஒலிம்பியாட்டின் 9வது சுற்றில் இந்தியாவின் 2 அணிகளின் போட்டிகளை டிராவில் முடிந்தன.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றுள்ளன. ஓபன் பிரிவில் நேற்று நடந்த 9வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி உஸ்பெகிஸ்தானை எதிர் கொண்டது. இந்த போட்டி 2-2 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதுவரை நடந்த 8 சுற்றிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. தற்போது முதல் முறையாக டிரா செய்துள்ளது.
இந்திய வீரர்கள் டி.குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் டிரா செய்தனர். 9-வது சுற்று முடிவில் இந்தியா 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 10-வது சுற்றில் அமெரிக்காவுடன் மோதுகிறது. அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், சீனா ஆகியவை தலா 15 புள்ளிகளுடன் உள்ளன.
பெண்கள் பிரிவில் இந்திய அணி 9-வது சுற்றில் அமெரிக்காவை சந்தித்தது. இந்த போட்டி 2-2 என்ற கணக்கில் என்ற கணக்கில் டிரா ஆனது. 9-வது சுற்று முடிவில் 15 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. 10-வது சுற்றில் சீனாவுடன் மோதுகிறது. கஜகஸ்தான் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.