#Chennai | திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாலும், கடந்த 18ம் தேதி தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாலும் அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த திமுக தலைமை செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு கூட்டம் இன்று (டிச.22) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு திமுக செயற்குழு கடும் கண்டனம்.
- குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாது.
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
- டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அதிமுக மற்றும் மாநில உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றிய மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்.
- கல்வித்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் திட்டமிட்டு வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம்.
- சாதி பாகுபாடற்ற “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்துள்ள திமுக அரசுக்க பாராட்டும் - வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம்.
- திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினை பெருமிதத்துடன் கொண்டாடுவோம்.
- தமிழர் பண்பாட்டுத் திருநாளாக பொங்கல் நன்னாளை தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் கொண்டாடுவோம்.
- வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 மட்டுமல்ல - 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்.
- இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களையும் - சிறை பிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனே விடுதலை செய்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.