சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி- டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டாத ரசிகர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது; இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றனர். இப்போட்டியானது வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகள் விளையாடி வெறும் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11-ல் பல குழப்பம் ஏற்பட்ட நிலையில் மாற்று வீரர்களை களமிறக்கி அணி நிர்வாகம் முயற்சி செய்தது; இதற்கிடையே சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெயிக்வாட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரிலிருந்து முற்றிலும் விலகினார். அவருக்கு பதிலக டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் சேர்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கேப்டனாக எம்.எஸ்.தோனி பொறுப்பேற்றார். அதன் பின் அணியில் புதிய மாற்றம் நடந்தது. இளம் வீரரான ஷேக் ரஷீத் மற்றும் 17 வயதான ஆயுஷ் மத்ரேவை சிஎஸ்கே அணி களமிறக்கியது . அவர்கள் சிறப்பாக விளையாடினாலும் சிஎஸ்கே அணி தோல்வியை மட்டுமே சந்தித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் சிஎஸ்கே அணிக்கு 6 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சற்று கடினம் தான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வியால் நாளை நடைபெறவிருக்கும் சென்னை - ஹைதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் சிலர் தங்களின் சமூக வலைதளங்களில் வாங்கிய விலைக்கே #csktickets என்ற ஹேஷ்டகில் விற்பனை செய்து வருகின்றனர்.
- விக்னேஷ்