சென்னை பட்டினம்பாக்கம் | சுனாமியால் உயிரிழிந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி!
சென்னையில் சுனாமியால் இறந்தவர்களுக்கு 20-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.
சென்னை பட்டினம்பாக்கம் நொச்சிகுப்பம் கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி அமைதி பேரணியாக நொச்சிகுப்பம் பகுதிக்கு வருகை புரிந்தார். இந்நிகழ்வில் இறந்தவர்கள் புகைப்படம் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர் தூவி மற்றும் கடற்கரையில் பால் ஊற்றியும் ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தமிழ்நாடு மீனவர் பேரவையின் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எங்களது சோகம் இன்னும் தீரவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக கடலுக்கு செல்லக்கூடிய மீனவர்கள் கொல்லப்படுவதும், சிறைச்சாலை அனுபவிப்பதும், உடைமைகள் பறிமுதல் செய்வதும் தமிழகத்தில் மட்டும்தான். இந்த நிலை மாற வேண்டும். மீனவர்களின் வாழ்க்கை மேம்படவும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.