பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதல் - தல தரிசனம் உண்டா?
பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மோதுகிறது. கடந்த போட்டியில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி இந்த போட்டியிலும் களமிறங்குவாறா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மோதியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் விளாசினார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசரஸ் ஹைதரபாத் அணி, 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் 78ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் 11புள்ளிகளுக்கும் குறைவாகவே உள்ளன. இதன்படி 6வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி அதிரடியாக விளையாடியதன் மூலம் 3வது இடத்திற்கு முன்னேறியது.
இந்த நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான சேப்பாக்கம் சிதம்பரத்தில் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த போட்டியில் கடைசி 2பந்துகளில் களமிறங்கிய எம்ஸ் தோனி 5ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து இன்றைய போட்டியிலும் தோனி களமிறங்குவாரா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.