சென்னை: தந்தையை தேடிச் சென்ற மகன் மழை நீரில் மூழ்கி பலி | 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் தந்தையை தேட சென்ற மகன் மழை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கின. சென்னையின் போரூர், காரப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது.
சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒரு பக்கம் அரசின் மீட்பு பணிகள் நடக்க இன்னொரு பக்கம் தன்னார்வலர்களும் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை பள்ளிகரணையில் தந்தையை தேடிச் சென்ற மகன் மழைநீரில் மூழ்கி 3 நாட்கள் கழித்து உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.