எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது! மோசடியில் உடந்தை என குற்றச்சாட்டு!
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நில மோசடி வழக்கில், உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் பிரித்விராஜை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலி சான்றிதழ் கொடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் சார் பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி புகார் அளித்தார்.
இதையும் படியுங்கள் : ஷாருக்கானுக்கு வில்லனாக களமிறங்கும் அபிஷேக் பச்சன் – வெளியான புதிய அப்டேட்!
இவ்வழக்கு வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது சிகிச்சையின்போது தான் உடனிருக்கவேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கேட்டு மீண்டும் ஜூலை 1-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீடு, தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் கடந்த 5-ம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதனிடையே, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி மற்றும் வாங்கல் வழக்குகளில் தாக்கல் செய்திருந்த தலா இரு முன் ஜாமீன் மனுக்கள் கடந்த 6-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கேரளாவில் நேற்று (ஜூலை 16) கைது செய்தனர். அவரை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நில மோசடி வழக்கில், உடந்தையாக இருந்ததாக சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.