For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் புதிய சாதனைப் படைத்த சென்னை மெட்ரோ!

10:03 PM Jan 10, 2024 IST | Web Editor
மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் புதிய சாதனைப் படைத்த சென்னை மெட்ரோ
Advertisement

இந்திய மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

Advertisement

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த மெட்ரோ கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது;

இந்திய மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில், இந்திய மெட்ரோ திட்டங்களில், முதன்முறையாக மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 மீ உயரத்திற்கு 30 மீ U கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தி, சென்னை மெட்ரோ இரயில் மைல்கல்லில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ இரயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'U' கர்டர் ஸ்பான் ஆகும். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கனரக வாகனம் 12 அச்சுகளில் தலா 8 டயர்களுடன் மொத்தம் 96 டயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் U Girder பணிக்கு தேவையான தடையற்ற போக்குவரத்து, எடை விநியோகம், நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற பணிகள் உறுதி செய்யப்படும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட குழுவினர் இணைந்து இந்த புல்லர் ஆக்சில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 30மீ நீளமுள்ள 185 மெட்ரிக் டன் எடை கொண்ட U-கர்டரைக் வெற்றிகரமாக நிறுவியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டக் குழு இதுபோன்ற புதுமையான தீர்வுகளை கட்டுமான பணிகளில் பயன்படுத்துவதால், இந்திய மெட்ரோ துறையின் வரலாற்று மைல்கல் சாதனையை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், சிக்கலான மற்றும் லட்சியத் திட்டங்களைத் துல்லியமாகவும் நிபுணத்துவத்துடனும் செயல்படுத்த பெரிதும் உதவுகிறது.

ஒக்கியம்பேட்டை மற்றும் காரப்பாக்கம் இடையே முதல் நீளமான 'U' கர்டர் ஸ்பான் இன்று (10.01.2024) அமைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

Tags :
Advertisement