#Metro திட்ட அறிக்கை : ரூ.4.80 கோடி ஒதுக்கீடு!
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் தற்போது 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் தற்போது, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், உயர்மட்ட பாதை பணி, தூண்கள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கலங்கரை விளக்கம், அடையாறு, சேத்துப்பட்டு, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் சுரங்க ரயில் நிலையங்கள் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள் : #TVK கொடி அறிமுகம்… மும்முரமாக நடைபெறும் பணிகள்!
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு செல்லும் வகையில் இந்த மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
2 ஆம் கட்ட திட்டத்தில் வழித்தடத்தை நீட்டிக்க, நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை மெட்ரோ கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2 கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை (43 கி.மீ.) நீட்டிப்பது, மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித் தடத்தை கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை (16 கி.மீ.) நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு 4.80 கோடி செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.