#Chennai | காந்தி மண்டபத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுடன் இணைந்து இன்று தூய்மைப் பணி மேற்கொண்டார்.
ஸ்வச் பாரத் அபியான் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். அக் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. நாளை (அக். 2) காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின்படி பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை முக்கிய பிரமுகர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று (அக். 1) சென்னை அடையாறில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தூய்மை பணியில் ஈடுபட்டார். அவருடன் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். கையில் பக்கெட்டுடன் காந்தி மண்டபத்தில் கிடந்த குப்பைகளை ஆளுநர் ரவி சேகரித்ததுடன், காந்தி சிலையையும் தூய்மைப்படுத்தினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு காந்தி மண்டப வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காந்தி மண்டப வளாகத்திற்கு வெளியேயும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.