சென்னை | கண்டெய்னரில் கடத்திவரப்பட்ட கஞ்சா - மடக்கிப்பிடித்த காவல்துறையினர்!
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நாகைக்குக் கடத்திவர முயற்சி செய்யப்பட்ட கஞ்சா கண்டெய்னரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். 8 கிலோ கஞ்சா மற்றும் கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கண்டெய்னர் லாரியில் அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாகத் தனிப்பிரிவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட 3 இடங்களில் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாகைக்கு அடுத்த புத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் டி.எஸ்.பி. மூர்த்தி தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் ஏறி சோதனை செய்தபோது ஓட்டுநர் இருக்கை அருகே கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறை கண்டெய்னர் திறந்து சோதனை செய்தனர். அதில் ஏராளமான மூட்டைகளில் பிரியாணிக்குப் பயன்படுத்தப்படும் இலை இருந்தது. இதனையடுத்து வெளிப்பாளையம் காவல்துறையினர் வாகனத்திலிருந்த நாகையைச் சேர்ந்த சுரேஷ், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரியாணி இலைக்குள் கஞ்சா வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்வதற்காக கண்டெய்னர் லாரியை போலீசார் கொண்டு சென்றனர். கண்டெய்னரில் உள்ள மூட்டைகளை காவல்துறை விடிய விடியச் சோதனை செய்து வருகின்றனர். முழு சோதனை செய்த பிறகே விவரங்கள் முழுமையாக கூறப்படும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.