சைக்ளோத்தான் போட்டியை முன்னிட்டு #Chennai கிழக்கு கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
'சைக்ளோத்தான் 2024' போட்டியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் தமிழக விளையாட்டு ஆணையம், HCL Cyclothon Chennai-2024 என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சைக்ளோத்தான்-2024 போட்டி வருகின்ற நாளை (அக்.6) காலை 05.00 மணி முதல் காலை 10.00 மணிவரை கானத்தூர் ரெட்டிகுப்பம் கிராமம் மாயாஜால் திரையரங்கம் முதல் மாமல்லபுரம் கிராமம் தனலட்சுமி ஸ்ரீனிவாச கல்லூரி வரை வந்து "ப" வளைவில் திரும்ப மாயாஜால் செல்ல உள்ள காரணத்தினால் அச்சமயம் கிழக்குகடற்கரைச்சாலையில் எவ்வித வாகனங்களும் செல்லக் கூடாது எனவும், அதற்கு மாறாக பூஞ்சேரி OMR சாலை - அக்கரை இணைப்பு சாலையினை வாகனங்கள் செல்ல பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
போட்டியின் போது உள்ளூர் வாகனங்களும் சாலையில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. சாலையில் கால்நடைகளை விடக்கூடாது. கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் பந்தய நேரத்தில் விருந்தினர்கள் வந்து செல்ல அனுமதிக்க இயலாது. போட்டி முடிந்த பிறகு அதாவது காலை 10.00 மணிக்கு மேல் வழக்கம்போல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.