9-வது முறையாக தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்...போலீசார் தீவிர விசாரணை!
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு 9-வது முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம்
மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் இந்த பள்ளிக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் போலி இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவிதமான வெடி பொருளும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என
தெரியவந்தது.
இதுவரை இந்த பள்ளிக்கு 9 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மிரட்டல் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம், பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, மவுண்ட் ராணுவ பள்ளிக்கும்
இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு
வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.