கைகளை கட்டிக்கொண்டு 28 மீட்டரை 1:59 நிமிடத்தில் நீந்திய 5வயது சிறுவன் - உலக சாதனை படைத்து அசத்தல்!
சென்னை அருகே பின்புறம் கைகளை கட்டி கொண்டு 28 மீட்டர் தூரத்தை 1:59
நிமிடத்தில் நீந்தி 5 வயது சிறுவன் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியை சேர்ந்த ஐடி ஊழியர் விஜய்(40)
அருணா(38) தம்பதியரின் இளைய மகன் 5 வயதான ரோஷன் தனியார் பள்ளியில் UKG படித்து வருகிறார். இந்த சிறுவன் தனது இரண்டு கைகளை பின்புறம் கட்டி கொண்டு
நீச்சல் குளத்தில் 28 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 59 நொடியில் கடந்து சாதனை
படைத்துள்ளார்.
சிறுவன் ரோஷனின் இந்த சாதனை லிங்கன் புக் ஆப் ரெக்கார்டில் இடம்
பிடித்துள்ளது. சிறுவனின் உலக சாதனையை நேரில் பார்வையிட்ட லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் ஜோசப் இளம் தென்றல் சாதனை படைத்த சிறுவன் ரோஷனை பாராட்டினார். மேலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் மற்றும் மாற்றத்தை நோக்கி நிறுவனர் சுதாகர் இருவரும் அந்த சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் - நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் சாதனை படைத்த சிறுவனுக்கு கிரீடம்
அணிவித்து மகிழ்வித்தனர். சிறுவனின் சாதனையை பார்த்த சிறுவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் சாதனை படைத்த சிறுவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.5 வயதுடைய UKG படிக்கும் சிறுவன் உலக சாதனை படைத்துள்ளதை பார்த்து பலரும்
வியந்து பாராட்டினர்.
இதுகுறித்து சாதனை படைத்த சிறுவனின் தந்தை விஜய் கூறுகையில் :
"சாதனை படைத்த ரோஷனுக்கு முறையாக நீச்சல் பயிற்சியாளரிடம் பயிற்சி பெறவில்லை. நான் ஒரு மாதம் மட்டுமே பயிற்சி கொடுத்தேன். ரோஷானுக்கு இருந்த ஆர்வம் இந்த சிறு வயதில் சாதனை படைக்க வைத்துள்ளது. மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்"
இவ்வாறு அந்த சிறுவனின் தந்தை விஜய் தெரிவித்தார்.