சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்! - திரளான பக்தர்கள் தரிசனம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாடு மக்களிடமிருந்து அனைத்து உரிமைகளையும் பிரதமர் மோடி பறித்துக் கொண்டார்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!
இதையடுத்து இந்த திருவிழாவின் 9வது நாளான நேற்று இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவில் 10ஆம் நாளான இன்று காலை கருவறையில் மாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், உற்ஸவ அம்பாளுக்கும் பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த தேரோட்ட விழாவை பொருத்தவரை திருச்சி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளான அரியலூர், பெரம்பலூர் புதுக்கோட்டை கரூர் தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், அலகு, அக்னி சட்டி போன்ற நேர்த்திக்கடனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.