கோடை காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு - பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை!
கோடை காலத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கோடை காலத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
"கோடைகாலத்தில் குளிா்ச்சியாக சாப்பிடும் போது சில நேரங்களில் தொண்டை வலி ஏற்படலாம். அதை அலட்சியப்படுத்தினால் அது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் வகை பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுத்து ரூமாட்டிக் காய்ச்சல் ஏற்படலாம். இது மூட்டு - இணைப்புத் திசு, தோல் மற்றும் மூளையை பாதிக்கும்.
இதற்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பும் ஏற்படக்கூடும். தொண்டையில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். கோடை காலத்தில் நோய்களை பரப்பும் கொசுக்களும் பெருக்கமடைகின்றன.
இதனால் கோடை காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்கும் போது முறையாக மூடி வைக்காமல் இருந்தால், நன்னீரில் வளரக்கூடிய, ‘ஏடிஸ்’ கொசுக்கள் உருவாகக்கூடும். குடிநீரை காய்ச்சி பிறகு குளிா்வித்து பருகலாம். இதன் மூலம், டெங்கு, டைபாய்டு, மூளைக் காய்ச்சல் மற்றும் எலிக் காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்."
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.