தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ் நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
“மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ் நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் ஜூலை 16 ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 16 தேதி தென்தமிழ் நாட்டில் கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.