தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் மட்டும் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் கோடைமழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் 2024: ராஞ்சியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி!
இந்நிலையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 26, 2024