அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
“மிக்ஜாம்” புயல் டிசம்பர் 5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்க கூடும் எனவும், அடுத்து வரும் 3 நாட்களுக்கு வட தமிழகம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு தென் கிழக்கே 510 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
”தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வரும் 5-ம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்க கூடும். அடுத்து வரும் 3 நாட்களுக்கு வட தமிழகம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
டிச. 3-ம் தேதி திருவள்ளூர் கடலூரில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச. 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2, 3, 4-ம் தேதிகளில் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
இயல்பாக 36 சென்டி மீட்டர் சராசரி மழை அளவு 34 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது. சென்னையில் 64 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 7% குறைவு. சென்னையில் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழை விட்டு விட்டு பெய்யும். சென்னைக்கு நாளை மதியம் தொடங்கி படிப்படியாக காற்று மழை இருக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.