மிக்ஜாம் புயல் வரும் 4-ந் தேதி சென்னை - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்!
டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், சென்னையின் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் டிசம்பர் 3-ம் தேதி மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 4-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மிக கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் வரும் 5-ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புயல் எச்சரிக்கை எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
”வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுப்பெற்றது. இது வரும் 3-ம் தேதி புயலாக வழுபெறக்கூடும். இந்த புயலானது சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையில் நான்காம் தேதி மாலை கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட கிழக்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 3-ம் தேதி சென்னை திருவள்ளூர் இடங்களில் கனமழையும் வேலூர் கள்ளக்குறிச்சி இடங்களின் கனமழை பெய்யக்கூடும். 3-ம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் காற்று 5 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்றும், நாளையும் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் டிச. 3-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.