அதிகனமழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த எச்சரிக்கை...!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை கொட்ட தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் இதுதொடர்பான ஒரு வார்னிங்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரியில் வடகிழக்கு பருவமழை நீடிப்பது இயல்பாகி வருகிறது. அத்தகைய நிலை இந்த ஆண்டும் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல இடங்களிலும் மிதமான மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளிலும், மாஞ்சோலை பகுதிகளிலும் அதிகமான மழை பொழிவு காணப்பட்டது. அடுத்த 2,3 தினங்களுக்கு வட தமிழக உள்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும்.
ஆனால், இதற்கெல்லாம் உச்சமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கனமழை இருக்கக் கூடும். இந்த வகை மழையானது காற்றழுத்த தாழ்வு நிலை (அல்லது) புயல் காரணமாக உருவாகிய மழையை விட சற்று வித்தியாசமானது. உதாரணமாக, 2020ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அல்லது 2021ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பெய்த மழையொடு நாம் ஒப்பீட்டு பார்க்கலாம்.
https://www.facebook.com/tamilnaduweatherman/posts/928678628624849?ref=embed_post
சராசரியாக, சென்னை மற்றும் அதன் சுற்றவட்டார பகுதிகளில் 75 -150 மி.மீ அளவு மழை பதிவை எதிர்பார்க்கலாம். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் 150-250 மிமீ வரையிலான அதிதீவிர மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.